Thursday 28 April 2016

சின்னஞ்சிறு தீபங்கள்

இருவர் மட்டுமே இருக்கும் வீடு

கடைச்சாவியை எடுத்து சட்டைப்பையில் வைக்கச்  சொன்னான் பாபு.
சங்கவி மறந்து விட்டாள் 
கிளம்பும்போது சட்டைப்பையைக் கவனித்தது நல்லதாகப் போயிற்று. சங்கவியிடம் பொறுமையாகத்தான் கேட்டான்.
ஆறுமாதங்கள்தான் ஆகியிருக்கும் திருமணமாகி 
அதற்குள் ஆயிரத்தெட்டு சண்டை. 
வீட்டில் அவன் செய்யும் ஒரே வேலை 'அது ஒன்றுதான்' என்பது போல கோபமாகப் பேசினாள். 
பதிலுக்கு அவன் பேச வாக்குவாதம் முற்றிவிட்டது.
மாலை திரும்பியவன் அவள் முகத்தைத் திருப்பியபடி வைத்துவிட்டுப் போன காபியைப் பருகியபடி சிந்தித்தான்.
இருவர் மட்டுமே இருக்கும் வீட்டில் இப்படி முகத்தைத் திருப்பிக் கொணடால் யாரிடம் பேசுவது?
இதற்குத் தீர்வு இல்லாமல் போய்விடுமே
தன்னிடம் உள்ள பத்து குறைகளை ஒரு தாளில் எழுதி அவளும், அவனிடம் உள்ள குறைகளை அவளும் எழுதிக்  காட்டினால் திருத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்குமே
சண்டைக்கு இடமில்லாமல் போய்விடுமே
சங்கவியை அழைத்தான். முதலில் மறுப்பு தெரிவித்த பின், சம்மதித்தாள்.   அவன் எழுதி முடித்தபின் நிமிர்ந்து பார்த்தால், அவள் இன்னும் எழுதிக்கொண்டிருந்தாள். 
பொறுமையிழந்தான்.நான் எழுதிட்டேன் இந்தா அதைக்கொடு தாளைப் படித்தவன் அதிர்ச்சியாகி விட்டான். 
தாள் முழுக்க ஐ.லவ்.யூ . பாபுவுக்கு என்னவோ புரிந்தது
  
டாக்டர்.ஜவாஹர் பிரேமலதா.

Tuesday 26 April 2016

ஓமலூரிலுள்ள ஒரு பெண்ணைப் பற்றி..

ஆர்.சண்முக சுந்தரம்
வாழ்க்கைப் போராட்டம் என்பது தென் மாவட்டங்களில் கடலோடும் கரையோடும், நதியோடும் வயலோடும் தொடர்புடையதாய் அமைந்தது. ஆங்காங்கே பெற்ற வெற்றி தோல்விகளின் விளைவாய்,அந்தந்தப் பகுதி மக்கள் வாணிகத்திற்கும் உடல் உழைப்பிற்கு விலை பேசும் இலங்கை, ,மலேசியா பர்மா , இந்தோனேஷியா என்று குடிபெயர்ந்து போகும் கொடுமைகளுமாய் மாறியது.
ஆனால் கொங்கு நாட்டில் வாழ்க்கைப் போராட்டம் மண்ணோடு நடக்கும் போராட்டமாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. கொங்கு மண்ணில் பிறந்தவர் கண் முன் தரிசாகவோ விளைநிலமாகவோ இருக்கிற பூமியைக் காண்கிறார். அது அவரிடம் ஆயிரம் கதைகள் பேசுகிறது. எங்கே உன் ஆற்றல் என்று கேள்வி கேட்டு அவரை உலுக்கி எழுப்புகிறது. அதல பாதாளமாயினும் நீரைக் காணாமல் ஓயமாட்டேன் என்று கிணற்றோடு நடத்தும் போராகிறது
கடலும் மனிதனும் என்ற தென் மாவட்ட வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்கிற மனிதனை, அவன் துயர்களை மட்டுமே உருவாக்கிக் காட்ட முடிகிறது. அது இயற்கை மனிதனுக்கு விதித்திருக்கும் வரம்பு. ஆனால் கொங்கு நாட்டில் போராட்டம் மண்ணோடு. அதில் ஆற்றல் உள்ளவன் ஜெயிக்கிறான். மண்ணை வென்ற மாட்சிமை மனிதனுக்குள் தனிப் பெருமிதத்தை உருவாக்குகிறது.
நேரிய பார்வையும்,நிமிர்ந்த போக்கும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத பெருமிதத்தையும் அவனுக்கு வழங்குகிறது. அந்த மானுடப் பெருமிதத்தின் ஒளியும் நிழலுமான அம்சங்கள் கூடவே உண்டு. எல்லாவற்றிகும் காரணமாவது மண் மீது அவன் காணும் வெற்றி
அதை வெளிக்கொணர்வதில் ஆர் .ஷண்முக சுந்தரம் வெகு இயல்பான வெற்றி கண்டவர். வட்டார வழக்கை வைத்து நாவல் எழுதிய சிலரில் பலர் வழக்கு மொழியைக் கையாண்டாலாயே போதும். வட்டாரச்சித்திரப்பை தந்து விட்டதாகத் திருப்தி காண்பர். ஆனால் அந்தப் பகுதியின் வித்தும் வேரு விழுதுகளுமான பண்புகளை, இயல்புகளை சிருஷ்டிப்பவர் விரல் விட்டு எண்ணுமளவு கூட இல்லை. அவர்களில் இடம் மான ஆர் .ஷண்முக சுந்தரம் தனிச் சிறப்பானது
புனைவு, நாவலில் என் திறமையைப்பார் என்று காட்டிக்கொள்ளாத பண்பு ஒரு வட்டாரம் யுகம் யுகமாய்ச் சுமந்த சோகம், மகிழ்ச்சி, ஏக்கம், வெற்றிச்செருக்கு இவற்றை முழுவதும் கணித்துணர்ந்து வெளிக்காட்டும் நடை அவருக்குக்  கை வந்தது.
மிடுக்கு, இடக்கு, மேதைமையை புலப்படுத்தும் செருக்கு இவை உண்மைக்கு புறம்பானவை என்று மௌனமாக அவர் வைக்கும் விமர்சனம் அது.அவர் ஒரு பகுதி மக்களின் உண்மையான வாழ்க்கை ஓட்டத்தைக் காட்ட முனைந்தவர். அவர்கள் இதயத்துடிப்பு என்ன வென்பதை அறிய மிகவும் உழைத்தவர்.
கொங்கு நாட்டு மனிதர்களின் பின்னணி கொங்கு நாட்டுப் பெண்கள். அவர்களே அந்தப் பகுதியின் முதுகெலும்பானவர்கள். அவர்களை வெகு எளிமையான கலை நேர்த்தியுடன் கண் முன் நடமாடும் உயிரோவியங்களாக அவர் சித்தரித்த பாங்கைத தமது ஆய்வியல் பார்வையோடு அணுகுகிறார் துணைப் பேராசிரியர்.டாக்டர்.ஜவாஹர் பிரேமா லதா அவர்கள்.
                      
                             
விரைவில் தாரிணி பதிப்பகத்தில் வெளியாக உள்ள அந்தப் படைப்பின் சில அறிமுகப் பக்கங்கள் இவை.
-----------------------------------------------------------------------
கொங்கு நாட்டில் சிறு விவசாயிகள் கையகல நிலத்தைக் கொண்டு வாழ்வின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில், குடும்பத்தைக் கரையேற்றப் படாதபாடு படுகிறார்கள். அவர்களோடு சேர்ந்து அவர்களது பெண்களும் மண்ணில் சரிக்குச் சமமாகப் பாடுபடுகிறார்கள். மனித வாழ்க்கை அவர்கள் வாழும் மண்ணில் வேர்கொண்டிருக்கிறது. மண்ணின் தன்மையோடு தன்னை இணைத்துக்கொண்ட கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையை அவர்களுக்குரிய பின்னணியைக் கொண்டு ஆர்.ச. படைத்துச் சென்றுள்ளார்.ஆடுமாடு மேய்த்தல், விவசாயம் செய்தல், கூலி வேலைக்குச் செல்லல், குடும்பத்தை நிர்வகித்தல் எனப் பெண்கள் ஓய்வு ஒழிச்சலின்றி உழைக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.
இச்சூழலில் கொங்கு கிராமத்தைச் சார்ந்த நகரப்பகுதியான கோவையின் தொழில் வளர்ச்சி, பிற மக்களின் வருகை, புதுத் தொழில்கள், நகரத்துக்குச் சென்று பணிபுரியும் மக்களின் பொருளாதாரப் பின்னணி, பல நிலைகளிலிருந்து ஏழை எளிய கிராம மக்களின் வாழ்வை நெருக்குதலுக்கு உள்ளாக்குகின்றன. எனினும், கொங்குப் பெண்கள் மண்ணையும், உழைப்பையும் உயிர் மூச்சாகக் கருதிப் போராடுகின்றனர். மண்ணில் காலூன்றிப் பாடுபட்டு, அம்மண்ணையே தெய்வமாகக் கருதி, அம்மண்ணிற்கே உரமாகிப் போகும் மானுடவாழ்வில் மண்ணுக்கும் மனிதனுக்கும் இடையே பாலமாக நின்று பெண்கள் நிலைத்திருத்தலுக்காகப் பாடுபடுகிறார்கள்.
காலங்கள் கடந்து போனாலும், நாகரிகம் தொழில்வளர்ச்சி என்ற பெயரில் உள்ளே நுழைந்தாலும் கொங்குப் பெண்களிடம் உடலுழைப்பும், மனஉறுதியும், கற்புநெறியும் கனன்று கொண்டிருக்கிறது. கொங்குப் பெண்கள் குடிப்பெருமையைக் கட்டிக் காக்கும் வல்லமை உடையவர்களாகத் திகழ்கின்றனர். நடுவு நிலைமை பழிக்கும் அஞ்சும் குணம், கடின உழைப்பு, மரபைக் காக்கும் மேன்மை, சுயமாகச் சிந்திக்கும் தன்மை, நியாயமென்று தோன்றிவிட்டால் எதையும் யாரையும் எதிர்க்கும் துணிவு, வெற்றி தோல்வி கருதாது இறுதிவரை போராடும் மாண்பு போன்ற பண்புகளின் ஒட்டுமொத்த வடிவமாக ஒவ்வொரு கொங்குப் பெண்ணும் திகழ்வதை ஆர்.ச. துல்லியமாகப் பதிவு செய்துள்ளார். கொங்கு மண் கடினத்தன்மை உடையது.
வானம் பார்த்த பூமியாதலால் காலந்தோறும் உழைக்க வேண்டியசூழல் உள்ளது. இதனால், பொருளாதாரத் தேவையை நிர்வகிக்கும் பெண்கள் சற்றுக் கறாராகவே நடந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே ஆம் மண்ணைப் போலவே அவர்களின் மனமும் இறுகிப் போயிருக்கிறது. உழைக்கும் வர்க்கத்துப் பெண்களாதாதலால் தன்மானம் உடையவர்களாக யாருக்கும் தலைவணங்காதவர்களாகத் திகழ்கிறார்கள். எனவே, கற்பு நிலையில் மிக உறுதி படைத்தவர்களாக, நெஞ்சுறுதி மிக்கவர்களாக, குடும்ப மானம் தன் கையில் என்ற உணர்வுடையவர்களாகத் தென்படுகின்றனர்.
உழைப்பே அவர்களின் மூச்சு. மண்ணில் காலூன்றப் பாடுபட்டு, அம்மண்ணையே தெய்வமாகக் கருதி அம்மண்ணிற்கே உரமாகிப் போகும் மானுட வாழ்வில் மண்ணுக்கும் மனிதனுக்குமிடையே பெண்கள் பாலமாகத் திகழ்கின்றனர். உடல் உழைப்பு, மன உறுதி, அலட்சியப் போக்கு, நியாயமென்று தோன்றிவிட்டால் எவரையும் எதிர்க்கும் துணிவு, வெற்றி தோல்வி கருதாது இறுதிவரை போராடும் துணிவு போன்ற குணங்களின் ஒட்டுமொத்த வடிவம்தான் கொங்குப் பெண்கள். ஆணுக்குப் பின்னிருந்து செயல்படுபவர்கள் அல்லர் இவர்கள். சுயமாகச் சிந்தித்து செயல்படும் வல்லமை உடையவர்கள்.
கிராமங்களில் ஒருவரைப் பற்றி ஒருவர் கருத்து பரிமாறிக் கொள்ளும் நிலை உள்ளது. நான்குபேர் சேர்ந்தால் மற்றவர்களைப் பற்றி கவலைப் படுகின்றனர். ஆனால், நகர்ப்புறத்தில் இதைக் காண முடிவதில்லை. கள்ளங்கபடமற்ற, எதிர்பார்ப்புத் தன்மையற்ற உறவுகளை ஆர்.ச. புதினம் அன்பினை அடித்தளமாகக் கொண்டு, தனது சுற்றங்களை அரவணைத்துச் செல்லும் பெண்களை மிகுதி. உறவுகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி தனது சுயநலத்திற்கு அவர்களை மூலதனமாக்கிக் கொள்ளும் போலித்தனமான மாந்தர்கள் இல்லை. அறிவியலின் ஆக்கமும், கல்வி நாகரிக வளர்ச்சி போன்றவை பல தாக்கங்களை மாற்றங்களை கொங்குமக்கள் வாழ்வில் ஏற்படுத்தியிருந்தாலும், கொங்கு மண்ணிற்கே உரித்தான கற்பு உறுதியும், துணிச்சலும், தனித்த ஆளுமையும் உடையவர்களாகப் கொங்குப் பெண்கள் திகழ்கின்றனர்.
கொங்கு மண் கடினத்தன்மையுடையது. இதில் உழைத்து உழைத்து உரமேறிய பெண்கள், மண்ணைப் போலவே நெஞ்சுறுதி மிக்கவர்கள். குடும்ப மானத்தைக் காக்க தயங்காதவர்கள். பழிக்கும் அஞ்சும் குணம் படைத்தவர்கள். சகமனிதர்கள் மீது கரிசனம் உடையவர்கள். அதேசமயம், உறவுகளைப் பகடைக் காய்களாகத் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள், போலித்தனம் அற்றவர்கள், கற்பில் உறுதியும், துணிச்சலும், தனித்த ஆளுமையும் உடையவர்கள்.
ஆர்.ச. தன் நாவலுக்கானப் பாத்திரங்களைக் கொங்கு மக்களின் வாழ்க்கையிலிருந்தே எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்பாத்திரங்கள் கற்பனை மாந்தர்கள் அல்லர். அச்சு அசலான உண்மை மாந்தர்கள்.வெளிநாட்டிலிருந்து இந்தியாவிந்கு பணி புரிய வந்த தாமஸ்மன்றோ தான் பார்த்த கொங்குப் பெண்களைப் பதிவு செய்திருக்கிறார்.
கி.பி.1800ல் கொங்குநாட்டை ஆட்சிபுரிந்த தாமஸ் மன்றோ அவர்கள் கொங்குநாட்டுப் பெண்களைப் பற்றி இவ்வாறு வர்ணிக்கிறார். தமிழ்நாட்டுப் பெண், அதுவும் கொங்குநாட்டின் ஒரு பகுதியான சேலத்திலுள்ள ஓமலூரிலுள்ள ஒரு பெண்ணைப் பற்றிய நிகழ்ச்சியைக் குறித்துத் தன் தந்தைக்குக் கடிதம் எழுதுகிறார் மன்றோ (1796 மே,10).
‘. . . இந்தப் பகுதி மக்களின் வறுமைக்குக் காரணம் அரசாங்கம்தான். அவர்களின் சோம்பலோ, கொளுத்தும் வெயிலோ அல்ல. அவர்களிடையே பல சாதிப் பிரிவுகள் உள்ளன; வேலையில் ஈடுபடும் ஊக்கம், வெவ்வேறு சாதி மக்களிடம் வெவ்வேறு அளவில் உள்ளது; தீர்வையை நிர்ணயிக்கும்போது நிலத்தின் திறனையும் கணக்கில் கொள்ள வேண்டும். பிராமணர்கள் எல்லா வகையான விவசாய வேலைகளையும் செய்யலாகார். ஏர் உழுவதைத் தவிர; அவர்களுடைய பெண்கள் வயல் வேலைகளில் ஈடுபடுவதில்லை. எனவே அவர்களுக்குப் பாதியளவு அல்லது முக்கால்வாசித் தீர்வைதான்……………..‘சில சாதிகளைச் சார்ந்த பெண்கள், ஆண்கள் செய்யும் அனைத்து (விவசாய) வேலைகளையும் செய்கிறார்கள்; மற்ற சாதிப் பெண்கள் ஏர் உழுவதைத் தவிர பிற வேலைகளைச் செய்வார்கள்; வேறு சில சாதிப் பெண்கள் எந்த வகையான விவசாய வேலைகளிலும் ஈடுபடுவதில்லை.
இதில் நல்லதொரு அம்சம் என்னவென்றால் ஆண்-பெண் என்று இருவகையினரும் ஊக்கமுடன் வேலை செய்யும் சாதியினர்தான் எண்ணிக்கையில் அதிகம். இந்த சாதியில் பெண்கள்தான் எல்லா நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்கின்றனர்; அவர்களின் உத்தரவுகளை ஆண்கள் மறுத்துச் சொல்வதில்லை. பெண்கள்தான் வாங்குவது, விற்பது, கடன் கொடுப்பது, கடன் வாங்குவது போன்ற சமாச்சாரங்களைக் கவனிக்கிறார்கள். தீர்வை சம்பந்தமாகக் கச்சேரிக்கு வரும் ஆண், வீட்டிலிருந்து கிளம்பும் முன், தன் மனைவியிடமிருந்து உத்தரவுகளை வாங்கிக் கொண்டுதான் வருகிறான். கச்சேரிக்கு வந்து, தனது முறையீட்டில் காரியம் ஆகவில்லை என்றால், அது எவ்வளவு சிறிய சங்கதியாக இருந்தாலும், வீட்டிற்கு வந்தபின் அவனுக்குக் கச்சேரிஇருக்கும்.
அடுத்த நாள் அந்தப் பெண் என்ன செய்கிறாள். ? கணவனை வீட்டில் இருக்கச் சொல்கிறாள்; சீற்றத்துடன் கச்சேரிக்குக் கிளம்புவாள் அங்கிருந்தே வருவாய்த் துறையின் அனைத்து அலுவலர்களையும் திட்டிக்கொண்டு வருவாள். கச்சேரிக்கு வந்ததும் ஒரு மணி நேரத்திற்கு நாடக பாணியில் ஏற்ற இறக்கத்துடன் பேச ஆரம்பிப்பாள். தன் புருஷன் மீது இந்த ராஸ்கோல்ஆட்கள் அநியாயமாகத் தீர்வையை ஏற்றிவிட்டார்கள் என்று பேசுவாள். முடிவுரையாகச் சொல்லுவாள்: மாடுங்க இல்லாம நான் ஏர் உழ முடியுமா? எப்படித் தங்கம் வாங்க முடியும்? இந்தப் புடவையை விற்றா வாங்க முடியும்?’- அரைகுறையாக உடுத்தியிருக்கும் அழுக்கடைந்த புடவையைச் சுட்டிக் காட்டுவாள்.
அவள் வேண்டுகோள் என்னவோ, அது நிறைவேறினால் முகத்தில் சிரிப்புடன் அங்கிருந்து கிளம்புவாள். இல்லாவிட்டால் அவள் குரல் ஓங்கி ஒலிக்கும். நீண்ட நாள் பழக்கத்தால், அந்தச் சமயங்களில் அவளுடைய குரல் ஆண் குரலைவிட வேகமாக ஒலிக்கும். கச்சேரியில் இருப்பவர்கள் கேலியாகச் சிரிப்பார்கள்.
வீட்டிற்கு வந்ததும் ராசியில்லாத கணவனைப் பார்ப்பாள். அவள் வாதம் சரியோ தப்போ, தன் ஆதங்கத்தைக் கொட்டுவாள். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் அன்றிரவு அவள் வழக்கம் போலத் தூங்குவாள். அடுத்த நாள் விடியற்காலையில் அவள் வீட்டுப்பக்கம் யாராவது போனால் அவளைக் காண முடியும். முன்தினம் எதுவும் நடக்காதது போல நூல் நூற்றுக் கொண்டிருப்பாள்.
நான் பார்க்கவில்லையானாலும், கேள்விப்பட்டிருக்கிறேன். பாதையில் சரியாக வழி புலப்படாத அந்த இருட்டு நேரத்தில் அவள் நூற்றுக் கொண்டிருப்பாள். இப்படிப்பட்ட விவசாயக்குடிப் பெண்கள்தான் இந்தியாவில் உற்பத்தியாகும் துணிகளுக்கு நூல் நூற்றுத் தருபவர்கள்.’”


Sunday 17 April 2016

ஒரு நாவலும் ஒரு பெண் சமூகமும்

1944 ல் எழுதப்பட்ட ஆர், சண்முகசுந்தரத்தின் நாகம்மாள் கதை வாசித்த போது  கொஞ்சம் பிரமிப்பாக இருந்தது .பொதுவாக  ஊர் , மக்கள் குறித்தான ஆழமான பார்வையெல்லாம் நான் கொண்டிருப்பதில்லை . ஆனால் , இந்த நாவல் வேறு ஒரு தளத்தில் சிந்திக்க வைத்தது , யோசிக்கையில் , மற்ற ஊர்ப்  பெண்களை விட கொங்குப்  பகுதி பெண்கள் ஒரு சுய அடையாளத்  தேடலோடு வெளிப்படுகிற ஆர்வத்தை இயல்பாகவே கொண்டிருக்கிறார்களோ என்று எண்ண வைத்தது.

இந்த கதையில் கணவனை இழந்த கிராமத்து பெண் நாகம்மாள் , கணவரின் தம்பி வீட்டோடு இருந்தாலும் , தனக்கு சேர வேண்டிய  சொத்துக்கு உரிமை கோரும் மனநிலை கொண்டவராக இருக்கிறார் . இவ்வளவுக்கும் கணவரின் தம்பி வீட்டில் இவர் தான் முதன்மையானவராகவும் இருக்கிறார் . இவர் சொல்படியே காரியங்கள் நடக்கிறது . அவரின் ஆளுமைப்பண்பு , பூமி என்பது ஆண்களின் சொத்து என்கிற மனநிலை கொண்ட சமூகத்தில் , காலகட்டத்தில்  ஒரு கிராமத்தை சார்ந்த பெண் அது குறித்தான சிந்தனையை கொண்டிருப்பதே பெரிய விஷயமாக தோன்றியது . அவர் அதை அடைய தேர்ந்தெடுத்த வழிமுறைகள் ஒப்பாததாக இருப்பினும்., அந்த மனப்பாங்கு , சாதாரணமாக கடக்க இயலாத ஒன்றாகவே இருந்தது .


இதை படித்த போது .என் அம்மச்சி (அம்மாவின் அம்மா ) ,.நினைப்பு தான் வந்தது   1970 களிலேயே ,சொத்து பிரச்சனையில் மூன்று தங்கைகளும் விலகி கொள்ள தனி மனுஷியாக போராடி , கீழ்க்  கோர்ட்டில் தோற்று , உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு  சேர வேண்டிய சொத்தை மீட்டுக் கொண்டவர்  பிறகு அதை நான்கு பேருக்குமாக பகிர்ந்தளித்த்தார் . பின்னாளில் இதை கேள்விப்பட்ட போது தான் உணர்ந்தேன் .. என் அம்மச்சி போராடியது சொத்துக்காக மட்டுமல்ல  , தனக்கான உரிமை உண்டு என்று நிரூபிக்கத்தான்  .
இந்த நாகம்மாளின் ஆளுமை தன்மை என்பது இந்த மண்ணில் கொஞ்சம் இயல்பான ஒன்றோ என யோசிக்க வைத்து விட்டது என்னை  சினிமாவில் கே பி .சுந்தராம்பாள் தொடங்கி ...தனக்கான தனி இடமாக பக்தி என்கிற ஒன்றின் வெளிப்பாட்டிலிருந்து நகராமல் , அப்போதே கதாநாயகர்கள் வாங்கிய சம்பளத்தை விட அதிகமாக  சம்பளம் வாங்கியவர் ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் 
                                                             
            

இவர்தான் . 25 வயதுக்குள் தான் காதலித்து மணந்து கொண்ட கிட்டப்பாவை இழந்து , அதற்கு பிறகு மிகப்பெரும் ஆளுமையாக சினிமாவில் வலம் வந்தவர் .சமரசத்துக்கு பேர் போன சினிமா உலகில்  . எந்த நிலையிலும் தன் கொள்கைகளை மாற்றி கொள்ளாமல் வெற்றி பெற்றவர் . இது தான் எனக்கு கேபிஎஸ் ஸிடம் மிக பிடித்த விஷயம்
இதையே பாடல் ஆசிரியர் தாமரையிடமும் சொல்லலாம் . தனக்கான சில தொழில் சார்ந்த கொள்கைகளிலிருந்தும் பிசகாமல் , எந்த பின்புலமுமற்ற தனி மனுஷியாக தன் தொழிலில் வெற்றி பெற்றவர் . அதுவும் இன்றைய போட்டி நிறைந்த சினிமா உலகில் .
                                                      

 [பொறியியல் முடிச்சதும் பெரிய நிறுவனத்துல வேலை கிடைச்சுது. என்னைச் சுற்றியிருந்த ஆண்கள் மத்தியில் நான் மட்டும்தான் ஒரே பெண் பொறியாளர். எனக்குக் கீழே வேலைபார்த்த பெரும்பாலானவர்கள், ஒரு பெண்ணுக்குக் கீழே வேலை பார்ப்பதை சங்கடமாகக் கருதினார்கள். அலுவல் வாழ்க்கையில் பல இடையூறுகளை அது எனக்கு ஏற்படுத்தியது.
பெண்களுக்கு எதிரான ஆண்களின் வன்முறைகளில் ஒன்று அவளது நடத்தையைக் குறிவைக்கும் குற்றச்சாட்டு. ஏற்றுக்கொள்ள முடியாத உயரங்களுக்கு அவள் வளர்ந்தால், இந்த ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி அவளைப் பாதாளத்துக்குள் புதைத்துவிடலாம் என்பது பலரின் நினைப்பு. இதில் இருந்து தப்பிப்பதற்காகவே எந்தச் செயலையும் ஒன்றுக்குப் பத்து முறை யோசித்துச் செய்வேன். அந்தப் பக்குவத்தைத் தந்ததும் பொறியாளர் பணிதான்.
நான் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவில் இருந்ததால் தவறுகள் மட்டும்தான் என் கண்களுக்குப் படும். எந்தெந்த இடத்தில் எல்லாம் தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அனுமானிக்கும் திறமையை என் பணி எனக்குக் கற்றுத்தந்தது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அந்த அனுபவம்தான் பின்னாளில் என் உயர்வுக்குத் துணை நின்றது. செய்வன திருந்தச் செய் என்ற என் இயல்பான குணம் அங்கே பட்டைதீட்டப்பட்டது. நேர்மையாக, உறுதியாக இருந்தால் எதற்கும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்பது நான் கற்றுக்கொண்ட பாடங்களுள் ஒன்று.
இதற்கிடையில், நடந்த திருமணம் வெறும் கசப்பைத்தான் தந்தது. என் உணர்வுகளை மதிக்காமல் உழைப்பைச் சுரண்டியவர்களுடன் தொடர்ந்து வாழ்வதில் எனக்குச் சம்மதமில்லை. பிரச்சினைகள் பூதாகரமாகி என்னை சோர்வுறச் செய்தபோது ஒரு முடிவெடுத்து வேலையை உதறினேன். அடுத்தது மணமுறிவுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. பிறந்த வீட்டுக்குத் திரும்பிச்செல்ல விரும்பாமல் எழுத்துத் துறையில் இருக்கும் முடிவோடு சென்னைக்கு வந்தேன்.நிறைய திரைப்பிரபலங்களைச் சந்தித்தேன். எனினும் வாய்ப்பு கிடைப்பது எளிதாக இல்லை. திரைப்படத்துறையில் வாய்ப்புக் கிடைக்க ஏதேனும் அடையாளம் அவசியம் என்பது புரிந்தது. மீண்டும் கோவைக்கே திரும்பினேன். பத்திரிகைகளுக்குக் கதை, கவிதைகள் எழுதிக் குவித்தேன். இலக்கிய வட்டத்தில் பெயர் அடிபடுமளவுக்கு வளர்ந்தேன். இந்த அடையாளத்துடன் மீண்டும் சென்னைக்குக் கிளம்பினேன்.
 வெறும் தாமரையாக வந்தபோது தயங்கியவர்கள், கவிஞர் தாமரை என்றபோது வாய்ப்புத் தரலாமே என யோசித்தார்கள். தொடர்ச்சியான தேடுதலுக்குப் பிறகு 97இல் இயக்குனர் சீமான் படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக நிறைய அலைய வேண்டியிருந்தது. 2000இல் இயக்குனர் கௌதம் படத்தில் "வசீகரா" பாடல் எனக்கான முகவரியாக அமைந்தது. வாழ்வில் நான் சந்தித்த துன்பம், கேள்வி, தேடல், விரக்தி இவற்றையெல்லாம் என் பாடல்களில் வார்த்தைகளாக வடித்தேன். என் சமூகப் பார்வைக்கு ஏற்ற பாடல்களைவிட காதலும் காதல் சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இருந்தாலும் தொடர்ந்து எழுதினேன்.- தாமரை]
அப்புறம் அம்பை . லக்ஷ்மியாக கோவையில் பிறந்து , மிக துணிச்சலான இலக்கிய ஆளுமையாக நின்று கொண்டிருப்பவர்.
                                                                      
                                                                         
இவர்கள் யாருமே பெண் என்கிற அடையாளத்தை, இந்த சமூகத்தில் அது தரும் சில சலுகைகளை முன்னிறுத்தி வந்தவர்களல்ல என்பது தான் இதில் அதி முக்கியமானது .
                                                         
கட்டுரை ஆசிரியர்:பிரபா மீனாட்சி