Sunday, 17 April 2016

ஒரு நாவலும் ஒரு பெண் சமூகமும்

1944 ல் எழுதப்பட்ட ஆர், சண்முகசுந்தரத்தின் நாகம்மாள் கதை வாசித்த போது  கொஞ்சம் பிரமிப்பாக இருந்தது .பொதுவாக  ஊர் , மக்கள் குறித்தான ஆழமான பார்வையெல்லாம் நான் கொண்டிருப்பதில்லை . ஆனால் , இந்த நாவல் வேறு ஒரு தளத்தில் சிந்திக்க வைத்தது , யோசிக்கையில் , மற்ற ஊர்ப்  பெண்களை விட கொங்குப்  பகுதி பெண்கள் ஒரு சுய அடையாளத்  தேடலோடு வெளிப்படுகிற ஆர்வத்தை இயல்பாகவே கொண்டிருக்கிறார்களோ என்று எண்ண வைத்தது.

இந்த கதையில் கணவனை இழந்த கிராமத்து பெண் நாகம்மாள் , கணவரின் தம்பி வீட்டோடு இருந்தாலும் , தனக்கு சேர வேண்டிய  சொத்துக்கு உரிமை கோரும் மனநிலை கொண்டவராக இருக்கிறார் . இவ்வளவுக்கும் கணவரின் தம்பி வீட்டில் இவர் தான் முதன்மையானவராகவும் இருக்கிறார் . இவர் சொல்படியே காரியங்கள் நடக்கிறது . அவரின் ஆளுமைப்பண்பு , பூமி என்பது ஆண்களின் சொத்து என்கிற மனநிலை கொண்ட சமூகத்தில் , காலகட்டத்தில்  ஒரு கிராமத்தை சார்ந்த பெண் அது குறித்தான சிந்தனையை கொண்டிருப்பதே பெரிய விஷயமாக தோன்றியது . அவர் அதை அடைய தேர்ந்தெடுத்த வழிமுறைகள் ஒப்பாததாக இருப்பினும்., அந்த மனப்பாங்கு , சாதாரணமாக கடக்க இயலாத ஒன்றாகவே இருந்தது .


இதை படித்த போது .என் அம்மச்சி (அம்மாவின் அம்மா ) ,.நினைப்பு தான் வந்தது   1970 களிலேயே ,சொத்து பிரச்சனையில் மூன்று தங்கைகளும் விலகி கொள்ள தனி மனுஷியாக போராடி , கீழ்க்  கோர்ட்டில் தோற்று , உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு  சேர வேண்டிய சொத்தை மீட்டுக் கொண்டவர்  பிறகு அதை நான்கு பேருக்குமாக பகிர்ந்தளித்த்தார் . பின்னாளில் இதை கேள்விப்பட்ட போது தான் உணர்ந்தேன் .. என் அம்மச்சி போராடியது சொத்துக்காக மட்டுமல்ல  , தனக்கான உரிமை உண்டு என்று நிரூபிக்கத்தான்  .
இந்த நாகம்மாளின் ஆளுமை தன்மை என்பது இந்த மண்ணில் கொஞ்சம் இயல்பான ஒன்றோ என யோசிக்க வைத்து விட்டது என்னை  சினிமாவில் கே பி .சுந்தராம்பாள் தொடங்கி ...தனக்கான தனி இடமாக பக்தி என்கிற ஒன்றின் வெளிப்பாட்டிலிருந்து நகராமல் , அப்போதே கதாநாயகர்கள் வாங்கிய சம்பளத்தை விட அதிகமாக  சம்பளம் வாங்கியவர் ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் 
                                                             
            

இவர்தான் . 25 வயதுக்குள் தான் காதலித்து மணந்து கொண்ட கிட்டப்பாவை இழந்து , அதற்கு பிறகு மிகப்பெரும் ஆளுமையாக சினிமாவில் வலம் வந்தவர் .சமரசத்துக்கு பேர் போன சினிமா உலகில்  . எந்த நிலையிலும் தன் கொள்கைகளை மாற்றி கொள்ளாமல் வெற்றி பெற்றவர் . இது தான் எனக்கு கேபிஎஸ் ஸிடம் மிக பிடித்த விஷயம்
இதையே பாடல் ஆசிரியர் தாமரையிடமும் சொல்லலாம் . தனக்கான சில தொழில் சார்ந்த கொள்கைகளிலிருந்தும் பிசகாமல் , எந்த பின்புலமுமற்ற தனி மனுஷியாக தன் தொழிலில் வெற்றி பெற்றவர் . அதுவும் இன்றைய போட்டி நிறைந்த சினிமா உலகில் .
                                                      

 [பொறியியல் முடிச்சதும் பெரிய நிறுவனத்துல வேலை கிடைச்சுது. என்னைச் சுற்றியிருந்த ஆண்கள் மத்தியில் நான் மட்டும்தான் ஒரே பெண் பொறியாளர். எனக்குக் கீழே வேலைபார்த்த பெரும்பாலானவர்கள், ஒரு பெண்ணுக்குக் கீழே வேலை பார்ப்பதை சங்கடமாகக் கருதினார்கள். அலுவல் வாழ்க்கையில் பல இடையூறுகளை அது எனக்கு ஏற்படுத்தியது.
பெண்களுக்கு எதிரான ஆண்களின் வன்முறைகளில் ஒன்று அவளது நடத்தையைக் குறிவைக்கும் குற்றச்சாட்டு. ஏற்றுக்கொள்ள முடியாத உயரங்களுக்கு அவள் வளர்ந்தால், இந்த ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி அவளைப் பாதாளத்துக்குள் புதைத்துவிடலாம் என்பது பலரின் நினைப்பு. இதில் இருந்து தப்பிப்பதற்காகவே எந்தச் செயலையும் ஒன்றுக்குப் பத்து முறை யோசித்துச் செய்வேன். அந்தப் பக்குவத்தைத் தந்ததும் பொறியாளர் பணிதான்.
நான் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவில் இருந்ததால் தவறுகள் மட்டும்தான் என் கண்களுக்குப் படும். எந்தெந்த இடத்தில் எல்லாம் தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அனுமானிக்கும் திறமையை என் பணி எனக்குக் கற்றுத்தந்தது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அந்த அனுபவம்தான் பின்னாளில் என் உயர்வுக்குத் துணை நின்றது. செய்வன திருந்தச் செய் என்ற என் இயல்பான குணம் அங்கே பட்டைதீட்டப்பட்டது. நேர்மையாக, உறுதியாக இருந்தால் எதற்கும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்பது நான் கற்றுக்கொண்ட பாடங்களுள் ஒன்று.
இதற்கிடையில், நடந்த திருமணம் வெறும் கசப்பைத்தான் தந்தது. என் உணர்வுகளை மதிக்காமல் உழைப்பைச் சுரண்டியவர்களுடன் தொடர்ந்து வாழ்வதில் எனக்குச் சம்மதமில்லை. பிரச்சினைகள் பூதாகரமாகி என்னை சோர்வுறச் செய்தபோது ஒரு முடிவெடுத்து வேலையை உதறினேன். அடுத்தது மணமுறிவுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. பிறந்த வீட்டுக்குத் திரும்பிச்செல்ல விரும்பாமல் எழுத்துத் துறையில் இருக்கும் முடிவோடு சென்னைக்கு வந்தேன்.நிறைய திரைப்பிரபலங்களைச் சந்தித்தேன். எனினும் வாய்ப்பு கிடைப்பது எளிதாக இல்லை. திரைப்படத்துறையில் வாய்ப்புக் கிடைக்க ஏதேனும் அடையாளம் அவசியம் என்பது புரிந்தது. மீண்டும் கோவைக்கே திரும்பினேன். பத்திரிகைகளுக்குக் கதை, கவிதைகள் எழுதிக் குவித்தேன். இலக்கிய வட்டத்தில் பெயர் அடிபடுமளவுக்கு வளர்ந்தேன். இந்த அடையாளத்துடன் மீண்டும் சென்னைக்குக் கிளம்பினேன்.
 வெறும் தாமரையாக வந்தபோது தயங்கியவர்கள், கவிஞர் தாமரை என்றபோது வாய்ப்புத் தரலாமே என யோசித்தார்கள். தொடர்ச்சியான தேடுதலுக்குப் பிறகு 97இல் இயக்குனர் சீமான் படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக நிறைய அலைய வேண்டியிருந்தது. 2000இல் இயக்குனர் கௌதம் படத்தில் "வசீகரா" பாடல் எனக்கான முகவரியாக அமைந்தது. வாழ்வில் நான் சந்தித்த துன்பம், கேள்வி, தேடல், விரக்தி இவற்றையெல்லாம் என் பாடல்களில் வார்த்தைகளாக வடித்தேன். என் சமூகப் பார்வைக்கு ஏற்ற பாடல்களைவிட காதலும் காதல் சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இருந்தாலும் தொடர்ந்து எழுதினேன்.- தாமரை]
அப்புறம் அம்பை . லக்ஷ்மியாக கோவையில் பிறந்து , மிக துணிச்சலான இலக்கிய ஆளுமையாக நின்று கொண்டிருப்பவர்.
                                                                      
                                                                         
இவர்கள் யாருமே பெண் என்கிற அடையாளத்தை, இந்த சமூகத்தில் அது தரும் சில சலுகைகளை முன்னிறுத்தி வந்தவர்களல்ல என்பது தான் இதில் அதி முக்கியமானது .
                                                         
கட்டுரை ஆசிரியர்:பிரபா மீனாட்சி 

No comments:

Post a Comment